"அய்யாமாரே...…அம்மாமாரே...… நாங்க சொல்லப்போற எங்க சோகக்கதைகளுக்கு கொஞ்சம் காதுகொடுங்க. நாங்க யாருன்னு கேட்கறீங்களா?
நாங்க காஞ்சாத்து மலை, சூரன் மலை, கொட்டாங்கட்டி மலைங்கதான் பேசுறோம். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி போற பாதையில செல்லூர் வாஸ்து சாலை இருக்கு. இங்கேயிருந்து தெற்க பார்த்துப் போனா, மலையடி கிராமம். அந்த சாலையில போனா மலையடிபட்டி காஞ்சாத்து மலையும் சுப்பிரமணியசாமி கோவிலும், சிவகங்கை சூரன்மலை காப்புக்காடும் வரும். பக்கத்துலயே கொட்டாங்கட்டி மலையும் அடிவாரத்தில் சண்முக நதி குடிநீர் ஊரணியும் இருக்கும்'’’ தங்கள் இருப்பிடத்தை விவரித்தன மலைகள்.
சிறிய இடைவெளிக்குப் பின் ஒரு ஒற்றைக்குரல் கேட்டது. "நான்தாங்க காஞ்சாத்து மலை. என்னைச் சுத்தி சின்னச் சின்ன மலைகள் இருக்கும். என் உச்சியில பல நூறு வருஷத்துக்கு முன்னால ஒரு சுப்பிரமணியர் கோவிலைக் கட்டினாங்க. இடையில ஒரு பிள்ளையாரும் வந்துசேர்ந்தாரு. நித்ய பூஜை உண்டுன்னாலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் விசேஷம். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவாங்க. சுத்தியுள்ள செட்டியார் சமூக மக்களோட இஷ்ட தெய்வம் இந்த சுப்பிரமணியர்.
மழைக்காலத்துல பொழியுற தண்ணி சுற்றியிருக்கிற மூலிகைக் காட்டுக்குள் ஓடி, பூலாங்குறிச்சி பெரியகுளத்தை நிறைச்சு அப்படியே சிவகங்கை, ராமநாதபுரம் வழியா காட்டாற்றுல கலந்து, கடலைப் போய் நிறைப்பேன். இந்தத் தண்ணியில குளிச்சா தீராத நோயும் தீரும். ஆனா இத்தனை நாள் ஓடிக்கிட்டிருந்த ஓடைய கொஞ்ச காலமா காணும். மலையவே முழுங்கிற மனுசனுக்கு, ஓடை ஒரு விக்கலுக்குத் தாங்குமா? மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருத்தர் முயற்சியால, ஓடையைச் சீரமைச்சிருக்காங்க.
இப்ப கொஞ்ச காலமா என் இடத்துல நடக்கக்கூடாததெல்லாம் நடக்குது. சாராயத்தைக் கொண்டுவந்து குடிச்சுட்டு கண்ட இடத்துலயும் உடைச்சுப் போடுறதும், இரவானால் பெண்களை அழைச்சுட்டு வந்து என் கண்முன்னாலேயே அசிங்கம் பண்றதும் சகிக்க முடியல. சீட்டாட்டம் கொடிகட்டிப் பறக்குது. கோயிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி வழிப்பறி நடக்க ஆரம்பிச்சிருக்கு. காதல்னு சொல்லிக்கிட்டு வர்ற ஜோடிகள், அத்துமீறல்கள்ல ஈடுபடுறாங்க. இதுக்கெல்லாம் எப்ப விடிவு வருமோ?'’என சலித்துக்கொண்டது.
அடுத்தபடியாக சூரன்மலை வாய்திறந்தது. "என்னோட சிறப்பே, மூலிகைகள் நிறைந்த காப்புக் காடுகள் நிறைஞ்சவன்கிறதுதான். இன்னைக்கும் ஓரளவு பசுமை போர்த்தி நிற்கிறேன். அந்த பசுமை எவ்வளவுநாள் மிஞ்சும்னு தெரியலை. என்னோட அரவணைப்புல மான்களும் காட்டு மாடுகளும் நிறைய இருக்கு. வேட்டைக்காரங்களுக்குப் பொறுக்குமா? துப்பாக்கிக்கும் வேட்டைக்காரனுக்கும் பயந்து வழிதப்பி காட்டைவிட்டு இறங்குற மான்கள நாய்கள் குதறிடுது.
வனத்துறைனு ஒண்ணு இருக்குது அவ்ளோதான்... என்னோட அரவணைப்புல உள்ள உயிர்கள் என் கண்முன்னாலே சாகிறத தாங்க முடியலை. சகோதரன் காஞ்சாத்து மலை சொன்னமாதிரி, சரக்குப் பாட்டிலோட வர்றவங்க, பொண்ணுங்களோட வர்றவங்க கொடுக்குற தொல்லை பெருந்தொல்லை. என்னோட அடிவாரத்துல உயர்நீதிமன்ற நீதிபதி ஒருத்தர் வீடு கட்டுறார். அவர் குடிவந்த பிறகாச்சும் நிலைமை மாறுதான்னு பார்க்கலாம்'’சூரன் பெருமூச்சுவிட்டது.
இருவரையும் ஏறிட்டுப் பார்த்தபின் கொட்டாங்கட்டிமலை தன் பாடுகளை பேச ஆரம்பித்தது. “"நானே என் பெருமையைப் பேசக்கூடாது. இந்த வட்டாரத்துல சுதந்திரப் போராட்டத்துல பூலாங்குறிச்சி மக்கள் பங்கு அதிகம். அவர்களை வளைச்சுப் பிடிச்சு அழிக்க வெள்ளையர்கள் முயற்சி செஞ்சப்ப, அவங்க தஞ்சமடைஞ்சது என் மடிதான். வெள்ளையர்கள் அவர்களை நோக்கி பீரங்கிக் குண்டுகளால சுட்டப்ப அதை ஏந்திக்கிட்டது என் நெஞ்சுதான்.
மழைபொழியிற நேரத்துல ஓடுற தண்ணியை வாங்கி, சிந்தாம சிதறாம சண்முகநதி குடிநீர் ஊரணில சேர்த்துடுவேன். ஆனா, என்னைச் சுத்தி இப்ப சமூக விரோதிக கூட்டம் அதிகமாகிடுச்சு. குடி, கூத்து, சீட்டு, ஒதுங்க வர்ற காதல் ஜோடிங்க பெருகிடுச்சு. நாங்க சீரழிஞ்சா காட்டுவளம் சீரழியும்னு மனுசங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை'’என குரல் கம்ம சொல்லி முடித்தது.
முறையாக ரோந்துபோய் பாதுகாக்கிறோம்’என நழுவிக்கொள்கிறது வனத்துறை.
இயற்கை வளங்களை காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதே அளவுக்கு தனிமனிதர்களுக்கும் இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.
-இரா.பகத்சிங்